top of page

பண்டைத் தமிழரின் விளையாட்டுக் கலையும், விளையாட்டின் தற்போதைய நிலையும்

rajamohansub

Updated: May 13, 2023

காணொளி வாயிலாக நிகழும் இந்த விழாவில் பங்கேற்றிருக்கும் தகைசால் ஆளுமைகளுக்கும், நண்பர்களுக்கும், குழந்தைகளுக்கும் வணக்கம்.


முதலில், நான் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். நான், இராஐ மோகன், 40 ஆண்டுகளுக்கு மேலாக, பொறியாளராக, இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பணி புரிந்து, ஓய்வு பெற்று, தற்போது, சென்னையில் வசித்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு விளையாட்டின் மீது மிகுந்த ஆஈ்வமும், ஈடுபாடும் உண்டு. எனது பள்ளி காலத்தில், இரண்டு நிலைகளில் (sub junior and Junior) சாம்பியனாகியுள்ளேன். இந்த ஆஈ்வம் எனது பொறியியல் கல்லூரியிலும் தொடர்ந்ததால் நான் எனது கல்லூரியை இரண்டு ஆண்டுகள் பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் பிரதிநிதித்துள்ளேன். குவைத்திலுள்ள தமிழ் நாடு பொறியாளர் குழுமத்தின் விளையாட்டு செயலாளராக, அதன் அங்கத்தினர்களுக்கு பல விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளேன்.அதே அமைப்பில், எனது துணைவியாருடன் இணைந்து, குடும்பங்களுக்கிடையேயான வளையப் பந்து (Tennikoit) போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம்.பணி ஓய்விற்குப் பின், தற்போது, மாலையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும், வாரமிருமுறை அறைப் பந்தாட்டமும் (Squash) வளையாடி வருகிறேன்.

சரி, நாம் இப்போது தலைப்புக்கு வருவோம்.


1. சங்க கால நூல்களில் ' விளையாட்டு:

''கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி'யாகிய நம் தழிக்குடி சங்க காலத்திலேயே விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதை நாம் காண முடிகிறது.சங்கத் தமிழ் நூல்களில் ' சிலம்பம், சல்லிக்கட்டு (ஏரு தழுவுதல் என்ற பெயரில்), ஆடு புலி ஆட்டம், வடம் வலி, நொண்டி' போன்ற விளையாட்டுகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இத்துடன், வில்வித்தை, மல்யுத்தம், வேட்டையாடல் முதலியனவும் சங்ககால விளையாட்டுகளாக கருதப்படுகிறது.


சிலம்பம், உடற்பயிற்சிக்கும் மற்றும் மனப்பயிற்சிக்கும் பயன்பட்டுள்ளதாக கபிலரின் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை கூறியுள்ளன.


ஆடு புலிஆட்டம், சிறுவர்களால், பொழுது போக்கிற்கும், திறன் வளர்ப்பதற்கும் விளையாடப்பட்டதாக சீத்தலை சாத்தனார் மணிமேகலையில் கூறியுள்ளார்.



வடம் வலி , சிறுவர்கள் மற்றும் இளைஞர்களால் திறன் வளர்பதற்கும், சுறுசுறுப்பாக இருப்பதற்கும் வேண்டி விளையாடியதாக புறநானூற்றுப் பாடல் கூறுகிறது



சிறுமிகளாலும் இளம் பெண்களாலும் நொண்டி விளையாடப்பட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.



வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) கலித் தொகையிலும், பெரும் பாணாற்றுப்படையிலும் குறிப்பிடப்படுகிறது.




இத்தகைய விளையாட்டுகள் சங்க கால தமிழ் சமூகத்தை சுறுசுறுப்பாகவும், திறன் மேம்பாட்டுடனும், உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதிலும் உதவியது. பெரும்பாலான சங்க கால விளையாட்டுகள் தொடர்ச்சியாக தமிழர்களால் விளையாடப்பட்டு இப்போதும் அந்த விளையாட்டுகள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளதை காணலாம்.


சங்க கால நூல்களிலோ, அல்லது ,மற்ற பிற தமிழ் இலக்கிய நூல்களிலோ ஆவணப்படுத்தப்படாத, சில பண்டைய விளையாட்டுகள், இப்பொழுதும், தமிழ் மக்களியிடையே புகழ் பெற்ற விளையாட்டுகளாய் திகழ்கின்றன. அவற்றில், முதன்மையானது, தமிழ் நாட்டின் மாநில விளையாட்டாக அங்கீகரிகப்பட்ட சடுகுடு என்ற கபடியாகும். தமிழ் நாடு தவிர, அண்டை மாநிலங்களிலும்,, சில தெற்காசிய நாடுகளிலும் இது விளையாடப்படுகிறது.


பல்லாங்குழி, கோ-கோ, உறி அடித்தல், கேரம், மாட்டு வண்டி போட்டிகள், சேவற்ச் சட்டை என்ற பிற விளையாட்டுகளும் இன்றும் விளையாடப்படுகின்றன.


2. தமிழ்க் கவிஞர்களின் தொடர் ஊக்குவிப்பு:

சங்ககால கவிஞர்களைப் போலவே நிகழ்கால கவிஞர்களும் விளையாட்டை ஊக்குவித்து வருகின்றனர். அதில் முன்னிலை வகிக்கும் முண்டாசுக்கவி, சுப்பிரமணிய பாரதி, தன் ' பாப்பா பாட்டில் ' 'மாலை முழுதும் விளையாட்டு என வழக்கப் படித்து கொளள்ளு பாப்பா' எனப் பாடியுள்ளார். இதில் கவனித்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால்' மாலை முழுதும்' என்ற அழுத்தத்தைத் தான். அவர் விளையாட்டின் உண்ணதத்தை உணர்ந்து, குழந்தைகள், சிறு வயதிலிருந்தே நன்றாக அதிக நேரம் விளையாட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.


மேலும், பட்டுக்கோட்டையார், ஒரு திரைப்பட பாலலில் ' ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்டா வளர்ச்சி' எனப் பாடியுள்ளார். ஆள் வளர்ச்சி என்பது உடற்ப்பயிற்ச்சியாலும், உடல் உழைப்பாலும் வருவது என்பதை சிறுவர்கள் உணர்ந்து, சீரிய முறையில் உடலையும் அறிவையும் வளர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.


3. உலக நாடுகளின் பங்களிப்பு:

மனித இனம் தோன்றியதிலிருந்தே, விலங்களிடமிருந்தும், இயற்கை சீற்றங்களிலிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்ள பலபல யுத்திகளை கையாண்டிருக்கிறது. அவற்றில் ஒன்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது. அதற்கு வேண்டி, பல உடற்ப்பயிற்ச்சிகளை மேற்க்கொண்டுள்ளது. அது தனி மனிதனாலோ அல்லது சமுதாயத்தாலோ முன்னெடுக்கப்பட்டுள்ளது்


பண்டைய கிரேக்க சமுதாயம் ஒண்றிணைந்து உருவாக்கிய திட்டமே பிற்காலத்தில், ஒலிம்பிக்ஸ் என்றரியப்படும் மாபெரும் விளையாட்டு நிகழ்வு. கிரேக்கர்கள் உருவாக்கிய திட்டத்திலிருந்து சில/பல மாற்றங்களுடன் இன்றைய ஒலிம்பிக்ஸ் உலா வருகிறது. கிரேக்கர்களை பெருமைப்படுத்தும் விதமாக, இபபொழுதும் ,ஒலிம்பிக் விளக்கு (torch) ஓட்டம் 'ஒலிம்பியா' என்ற கிரேக்க நகரத்திலிருந்தே தொடங்குகிறது. ஒலிம்பிக்ஸ் மட்டுமல்லாமல் மல்யுத்தம் ( wrestling) தட்டு எறிதல் ( discuss throw) போன்றவைகளும் கிரேக்க சமுதாயத்தின் பங்களிப்பாகும்.


நம் தாயகமாம் இந்தியாவும், பின் தங்கி விடவில்லை, சதுரங்கமும், போலோவும் ( மணிப்பூரில் தோன்றியது), மற்றும் யோகோவும் நம் நாடு உலக நாடுகளுக்கு பங்களித்த விளையாட்டுகளாகும்.


ஆங்கிலேயர்கள் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் ரக்பியையும், அமெரிக்கர்கள் கைப்பந்தாட்டம் (Volley ball) , கூடைப்பந்தாட்டம் (Basket ball), மற்றும் ஸ்கேட் போடிங்யையும், ஜப்பானியர்கள் கராத்தேயையும், சீனர்கள் மேசைப் பந்தாட்டத்தையும் பங்களித்துள்ளனர்.


4. விளையாட்டின் நன்மைகள் :

விளையாட்டுகள் எல்லா வயதினருக்கும், ஏராளமான நன்மைகளை தருவதோடு, ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கவும் உதவுகிறது,


தவறாமல் முறைப்படி விளையாடுபவர்களுக்கு, நல்ல உடற்பயிற்ச்சியாகவும் உடல் தகுதியை பராமரிக்கவும் உதவுகிறது.மேலும், நல்ல பலசாலியாகவும், வலிமையுடனும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு உதவுகிறது.


விளையாடும் பொழுது ' என்டோர்பின்' என்றொரு ' ஹார்மோன்' நமது உடம்பில் சுரப்பதால் அது நமது மன நலத்தைப் பேணுவதோடு மனக் கவலையையும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.


விளையாட்டு , நல்ல நண்பர்களையும், நீண்ட நாள் உறவுகளை தேடித் தரவும், மற்றும், மேம்படுத்தவும் உதவுகிறது.


குழு விளையாட்டுகள், குழுத்திறன், தலமைத்துவம், செய்தி பரிமாற்றம் ஆகிய திறன்களை மேம்படுத்த உதவுகிறது.


விளையாட்டில் , ஒழுக்கமும், ஈடுபாடும் வேண்டியிருப்பதால் அது தனி மனித சுய கட்டுப்பாடு, மனவுறுதி மற்றும் விடா முயற்ச்சியை விரிவாக்க உதவுகிறது.


விளையாட்டு, நமது அறிவாற்றல் திறனையும், ஒருமுக சிந்தனையையும் வளர்த்துவதால் , வழக்கமாக வியையாட்டில் பங்கேற்பது, நமது கல்வி செயல் திறனை மேம்படுத்த உதவும் என ஆய்வுகறிக்கைகள் கூறுகின்றன.


விளையாட்டு,நீடித்த நோய்களான நீரழிவு, உடல் பருமன் மற்றும் இருதய நோய்களை வராமல் தடுப்பதற்க்கோ அல்லது கட்டுக்குள் வைப்பதற்க்கோ உதவுகிறது.


புதிய யுத்திகளை படிப்பதற்க்கும், படித்த யுத்திகளை மேம்படுத்துவதற்க்கும், சுய வளர்ச்சியை பேணுவதற்க்கும் உதவுகிறது.


விளையாட்டு, நன்றாக தூங்குவதற்க்கும், வேகமாக தூங்குவதற்க்கும் உதவுவதால், அது ,நமது ஒட்டு மொத்த உடல் நலத்திற்கு நல்லது.


5. விளையாட்டை வகைப்படுத்தல்:

நாம் இப்போது விளையாட்டை எவ்வாறு வகைப்படுத்துவது எனக் காணலாம்.


பரந்த நோக்கில், நாம் விதிக்கிம் வரன்முறைகள் படி, விளையாட்டை, இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று, உடல் செயல்பாட்டைச் சார்ந்தது, மற்றொன்று, மன செயல்பாட்டைச் சார்ந்தது.

  • உடல் செயல்பாட்டைச் சார்ந்த விளையாட்டுகள்:

நீண்ட தூர ஓட்டம்,(உதாரணம், மராத்தான் ஓட்டம்), நீச்சல் மறறும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றிற்கு நீடித்திருக்கும் உடல் உழைப்பாற்றல் தேவைப்படுவதால் அவைகளை, ' தாங்கும் திறன் வேண்டிய விளையாட்டு (endurance sport) என வகைப்படுத்தலாம்.


தசை வலிமை வேண்டிய விளையாட்டுகள் என பளு தூக்குதல், மின் தூக்குதல் ( power lifting) ஆகியவற்றை கூறலாம்.


வேக விளையாட்டுகளாக, விரைவோட்டம் (sprint), விரைவுச் சறுக்கல் (speed skating), மற்றும் மோட்டார் பந்தயம் கருதப்படுகிறது.


ஜிம்னாஸ்டிக்ஸ், வடிவச் சறுக்கல் ( figure skating), மற்றும் டைவிங் போன்ற விளையாட்டுகளுக்கு மிகுந்த ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.


கால் பந்து, கூடைப்பந்து, மற்றும் கைப்பந்து விளையாட்டுகளை குழு விளையாட்டுகள் எனலாம்.


குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் குழிப்பந்தாட்டம்( golf) போன்ற விளையாட்டுகள் தனி மனித விளையாட்டுகளாகும்.

  • மன செயல்பாட்டைச் சார்ந்த விளையாட்டுகள்:

ஆலோசனை, திட்டமிடல், மறறும் முடிவெடுத்தல் ஆகியவை தேவைப்படும் யுத்தி விளையாட்டுகளாக (strategy games) செஸ் மறறும் போக்கர் விளையாட்டுகள் உள்ளன.


குயிஸ் மறறும் மேட்சிங் (memory matching) விளையாட்டுகளுக்கு நினைவு, ஞாபக சக்தி அதிகம் தேவைப்படுகிறது.


குறுக்கெழுத்துப் போட்டி, சொல்லாக்க ஆட்டம் (scrabble) போன்றவை மொழித் திறனை மேம்படுத்த உதவுகிறது.


தருக்கப் புதிர் (logic puzzle), மற்றும் சுடோக்கு விளையாடுவதற்கு தருக்க ரீதியான பகுத்தறிவு தேவைப்படும்.


6. ஒலிம்பிக்கும் அதில் இந்தியாவின் பங்கும்:


  • ஒலிம்பிக்கின் வரலாறு:

மனித இனத்தின் மிகப் பெரியதும், பெருமையுடையதுமாக கருதப்படும் விளையாட்டுப் போட்டிகள் 1896 முதல் 'ஒலிம்பிக்ஸ்' என்ற பெயருடன் நான்கு ஆணடுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னோடியாக கருதப்படுவது, கிமு 8ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4ஆம் நூற்றாண்டு வரை கிரேக்க நாட்டில் ' ஒலிம்பியா' என்ற இடத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளேயாகும்.

முதல் ஒலிம்பிக்ஸ் போட்டியின் திறப்பு விழா


கிரேக்கம், இரோமனிய ஆட்சிக்கு உட்பட்ட பிறகு, ஒலிம்பிக் போட்டிகள், படிப்படியாக தனது முக்கியத்துவத்தை இழந்து சுமார் கிபி 400ஆம் ஆண்டு வாக்கில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. நவீன ஒலிம்பிக்கை தொடங்க பலர் முயற்சி செய்த போதிலும் பெரோன் டி கோபர்டி என்ற பிரெஞ்ச்சுக்காரரே, சர்வதேச ஒலிம்பிக் குழுவை ( International Olympic committee) அமைத்து அதன் மூலம் நவீன ஒலிம்பிக்கை தொடங்க வழிவகை செய்தார்.


ஒரு வித்தியாசமான தகவல் என்னவென்றால் கிரேக்க ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டனர். அவர்களும் ஆடை இன்றி கலந்து கொள்ள வேண்டும். 1900இல் பேரிஸில் நடைபெற்ற போட்டிகளில் பெண்கள் முதல் முதலாக பங்கேற்றனர்.


  • ஒலிம்பிக்கின் வளர்ச்சி:

இப்போது ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கோடை ஒலிம்பிக்ஸ், குளிர் கால ஒலிம்பிக்ஸ், மற்றும் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக்ஸ் என பல பெயர்களில், எல்லா வகையான விளையாட்டுகளில், எல்லா நாட்டு மக்களும் பங்கேற்ப்பதற்கு ஏதுவாக நடத்தப்படுகிறது. மாற்று திறனாளிகள் ஒலிம்பிக்ஸ், கோடை ஒலிம்பிக்ஸ் நிறைவுற்ற சில நாட்களிலேயே தொடங்கும். குளிர் கால ஒலிம்பிக்ஸ், கோடை ஒலிம்பிக்ஸ் நிறைவுற்று இரணடு ஆணடுகள் இடைவெளியில் தொடங்கும்.


ஒலிம்பிக்ஸ் இயக்கம், உலகின் ஐந்து கண்டங்களின் ஒற்றுமையை குறிக்கும் விதம், ஒன்றோடு ஒன்று பிண்ணிப் பிணைந்த ஐந்து வண்ண வளையங்களை தன்னுடைய கொடியில் கொண்டுள்ளது. மேலும் அதன் குறிக்கோள் (motto), வேகம் (citius), உயரம் (altius), வலிமை (fortius) என்பதாகும்.


1896இல், ஏதன்ஸில் நடந்த முதல் ஒலிம்பிக்கில் 14 நாடுகளிலிருந்து 241 விளையாட்டு வீரர்கள் 43 இனங்களில் ( events) பங்கெடுத்த நிலையில், அது வேகமாக வளர்ந்து, 2021இல், டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் 206 ஒலிம்பிக் குழுக்களிலிருந்து 11000க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் 339 இனங்களில் ( events) பங்கெடுத்தனர். இதன் மூலம், உலகிலுள்ள எல்லா நாடுகளும் கடந்த கோடை ஒலிம்பிக்கில் பங்கெடுத்துள்ளது தெரிகிறது.


இதே வேளையில், 1924இல் சேமானிக்ஸ், பிரான்ஸில் நடந்த முதல் குளிர் கால ஒலிம்பிக்கில் 16 நாடுகளிலிருந்து 258 விளையாட்டு வீரர்கள் 16 இனங்களில் ( events) பங்கெடுத்த நிலையில், 2022இல், பீஜிங்கில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் 91 ஒலிம்பிக் குழுக்களிலிருந்து 2871 வீரர்கள் 109 இனங்களில் ( events) பங்கெடுத்தனர்.


உலகின் முதல் ஒலிம்பிக் வெற்றி வீரராக ( champion), கிரேக்க வீரர் கொரோபஸ் அறியப்படுகிறார். அவர் குறு விரைவோட்டத்தில் (sprint) தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.


  • ஒலிம்பிக் இடை நிறுத்தம் மற்றும் இடர் பாடுகள்:

1896இல் தொடங்கப்பட்ட நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ச்சியாக நாண்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றிருக்கின்றனவா என்றால், இல்லை. ஏன்?, அது எப்போது தடைப்பட்டது?.


ஒன்றாம் உலகப் போரின் போது பெர்லின், ஜெர்மனியில் நடக்கவிருந்த 1916 விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டன, அது போல இரண்டாம் உலகப் போரின் போது 1940 மற்றும் 1944 இல் நடக்கவிருந்த விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.


மேலும், அமெரிக்க- சோவியத் யூனியன் பனிப்போர் நடந்த காலங்களில், அமெரிக்கா 1980இல் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கையும், அதற்கு பதிலடியாக, சோவியத் யூனியன் 1984இல் லாஸ் ஏஞ்சலிஸில் நடந்த ஒலிம்பிக்கையும் புறக்கணித்தன.


அண்மையில், உலகத்தையே புரட்டிப் போட்ட 'கோவிட்' என்ற கொள்ளை நோயினால் 2020இல் நடக்கவிருந்த போட்டிகள் 2021இல் தான் நடந்தது.


ஒலிம்பிக் விளையாட்டுகள், அரசியல் தலலயீடுகள், ஊக்க மருந்து உபயோகம், ஊழல், பயங்கரவாதம், இனவாதம், பாலினப் பாகுபாடு, புறக்கணிப்பு என பல இடர் பாடுகளையும் கடந்து இப்போதும் வெற்றிகரமாக நடந்து வருவது மனித இனத்தின் வெற்றியாக கருதப்படுகிறது. இந்த வெற்றிக்கு காரணம், நவீன மின்னனு சாதனங்களும், தொலைக் காட்சிகளும், சமூக ஊடகங்களும், பத்திரிக்கை ஊடகங்களும் ஒண்றிணைந்து விளையாட்டு நிகழ்ச்சிகளை மற்றும் விளையாட்டு தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது தான் என அறுதியிட்டு கூறலாம். இந்த வெற்றிக்கு எடுத்துக் காட்டாக, உலகப் புகழ் பெற்ற நெல்சன் புள்ளி விவரப்படி சுமார் 320 கோடி மக்கள், 2016 கோடை ஒலிம்பிக்கின் ஏதாவது ஒரு போட்டியை கணடு ரசித்துள்ளார்கள் எனக் கூறுகிறது.


  • ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் விவரம்:

இது வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில், அமெரிக்கா முதல் இடத்திலும் (சுமார் 2500 பதக்கங்கள்), சோவியத் யூனியன் மற்றும் ரஷ்யா இரண்டாம் இடத்திலும் (சுமார் 1700 பதக்கங்கள்) உள்ளன.


வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சைனாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. 2008 பீஜிங் ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தையும் அதன் பின் நடந்த எல்லா ஒலிம்பிக் போட்டிகளிலும் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது,


உலக வரலாற்றில், ஒலிம்பிக்கில், அதிக பதக்கங்களை பெற்றவர்கள வரிசயில், மைககேல் ஃபெல்ப்ஸ் என்ற அமெரிக்க வீரர், நீச்சலில் 28 பதக்கங்களையும், சோவியத் யூனியனின் லரிசா லத்தினினா என்ற வீராங்கனை, ஜிம்னாஸ்டிக்கில் 18 பதக்கங்களையும் வென்றுள்ளனர். தடகள விளையாட்டு போட்டிகளில் கால் லூயிஸ் என்ற அமெரிக்க வீரர் 10 பதக்கங்களை வென்றுள்ளார்.


  • விளையாட்டின் சில அற்புத விசயங்கள் அல்லது துணுக்குகள்:

ஒலிம்பிக் விளையாட்டின் சில அற்புத விசயங்கள்(trivia) அல்லது துணுக்குகளை(tit bits) இப்போது பார்க்கலாம்.

  • பண்டைய கிரேக்க நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியாளர்கள் ஆடை இன்றியே கலந்து கொண்டார்கள். அவ்வாறு கலந்து கொள்வது அவர்களது அஞ்சாமையையும், தைரியத்தையும், அதிகாரத்தையும் காட்டுவதாக கருதப்பட்டது.

உங்களுக்கு தெரியுமா?, Gymnasium ( உடற்ப்பயிற்ச்சிக் கூடம்) என்ற ஆங்கில வார்த்தை நிர்வாணத்தை குறிக்கும் Gymnos என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது.

  • வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் பதக்கங்களை கடிப்பதை பார்ததிருப்பீர்கள். அது எதற்கு என்று தெரியுமா?. பண்டைய காலத்தில், பதக்கங்களில் விலை மதிப்பற்ற உலோகத்துடன காரீயத்தை ( lead) சேர்த்திருப்பார்களா என்பதை கண்டறியவே அவ்வாறு செய்திருந்தனர். காரீயம் சேர்த்திருந்தால் கடிக்கும் பொழுது அதில் பல் படிந்து விடும். அந்த வழக்கமே இப்போதும் தொடர்கிறது.

  • நவீன ஒலிம்பிக்ஸ் சுமார் 1500 ஆண்டுகளுக்கு பின் புததுயிர் கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஒலிம்பிக் தங்க பதக்கங்கள, கட்டித் தங்கமாக 1912 வரையே வழங்கப்பட்டது. இப்போதைய தங்க பதக்கத்தில், 92.5% வெள்ளியும், 6 கிராம் தங்க முலாமும் பூசப்படும் அதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ 65,000/- ஆகும் .

  • கிரேக்கத்தின் ஒலிம்பியா நகரிலிருந்து ஒலிம்பிக் நடைபெறும் நகருக்கு செல்லும் வழியில், ஒலிம்பிக் சுடர், இது வரை, ஒரு தடவை கூட அணைந்ததில்லை.

  • 1960இல் ரோமில் நடந்த மராதான் போட்டியில் அபேபே பிக்கிலா என்ற எத்தியோப்பிய இளைஞர், காலில் காலனிகள் ஏதுமின்றி ஆப்பிரிக்காவின் முதல் தங்க பதக்கத்தை வென்றார்.

  • பண்டைய கிரேக்க ஒலிம்பிக்கில் வெற்றியாளர்களுக்கு ஓலிவ் கீரிடமே பரிசாக அளிக்கப்பட்டது.


ஒலிம்பிக்கில் இந்தியாவின் பங்கு:

1900ஆம ஆண்டு, பாரீஸில் நடந்த இரண்டாவது நவீன ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவின் சார்பில், நார்மன் பிரீச்சாட் என்பவர் கலந்து கொண்டு இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். அவர் ஆங்கிலேயராக இருந்தாலும், தனி விளையாட்டு வீரராக போட்டியில் கலந்து கொண்டாலும், அவர் கல்கத்தாவில் பிறந்ததாலும் இந்திய கடவுச் சீட்டு (passport) உபயோகித்து பயணம் செய்திருந்ததாலும், அவரை இந்திய விளையாட்டு வீரராக சர்வ தேச ஒலிம்பிக் குழு ( IOC) அங்கீகரித்துள்ளது.

1947 வரை இந்தியா , பிரிட்டானிய ஆட்சிக்கு உட்பட்டு இருந்தாலும் 1920 முதல் 1936 வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தனியாகவே கலந்து கொண்டுள்ளது.

ஹாக்கி போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியிருந்ததை நாம் அறிவோம்.1928 முதல் 1980 வரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 11 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 1928 முதல் 1952 வரை இந்தியா தொடர்ந்து 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

அதன் பின் தமிழக வீரர் பாஸ்க்கரன் தலைமையில், 1980இல, மாஸ்கோவில் நடந்த போட்டிகளில் தங்கம் வென்றது, தமிழகத்திற்க்கு பெருமை சேர்ப்பதாகும்.

2008இல், பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் ( 10m air rifle), அபினவ் பிந்திரா ,தங்கம் வென்று, தனி நபர் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியரானார்.

இந்தியாவின் பதக்கத்திற்க்கான முயற்சி சிறிது சிறிதாக ஈடேறி வருவதைக் காணலாம். முயற்சிக்கான பலனாக, இந்தியா, 2020இல் டோக்கியோவில் நடந்த போட்டிகளில் 7 பதக்கங்களை வென்றுள்ளது. இதே ஒலிம்பிக்கில், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கிற்கு பின் இந்திய ஹாக்கி அணி ஒரு வெங்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

தடகள விளையாட்டுகளில், இந்தியா, இரண்டு பதக்கங்களை மயிரிழையில் தவற விட்டுள்ளது. ஒன்று, 'பறக்கும் சீக்கியர்' என்றறியப்படுகின்ற மில்கா சிங்க், 1960இல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 0.1 வினாடி வித்தியாசத்தில் வெங்கலப் பதக்கத்தை தவற விட்டது.

மற்றொன்று, தற்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், 'பையோலி எகஸ்பிரஸ்' என்றறியப்படுகின்ற பி டி உஷா, 1984இல் லாஸ் ஏன்சலிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் 0.01 வினாடி வித்தியாசத்தில் (அதாவது 100இல் ஒரு பங்கு வினாடி) வெங்கலப் பதக்கத்தை தவற விட்டது தான்.

இது வரை, நாம் ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றி பார்த்தோம். இனி, மற்ற புகழ் பெற்ற விளையாட்டுகளையும் அதில் இந்தியாவின் செயற்பாடுகளையும் பற்றி பார்க்கலாம்.


7. புகழ் பெற்ற மற்ற விளையாட்டுகள் :

  • கால்பந்து :

கால்பந்து என்றும் சாக்கர் என்றும் அழைக்கப்படுகிற இந்த விளையாட்டு உலகில் மிகப் புகழ் பெற்ற விளையாட்டாகும். இந்த விளையாட்டு, பண்டை காலங்களிலிருந்தே விளையாடப்பட்டு வந்திருந்தாலும், 1863இல் தான், இதற்கு, இங்கிலாந்தில் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு உருவானது. அதன் பின், 1904இல, செயின்ட் லூயிஸ், அமெரிக்காவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக சேர்க்கப்பட்டது.


1904இல், சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பு ( FIFA) உருவாக்கப்பட்டு, 1930இல், முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க நாடான, உருகுவேயில் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டில், உருகுவே, முதல் உலகக் கோப்பையை வென்றது.


தென் அமெரிக்க நாடுகள் கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், ஐரோப்பிய நாடுகளின் அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. 1930 முதல் 2022 (கத்தர்) வரை நடந்த 22 உலகக் கோப்பை போட்டிகளில், 10 முறை தென் அமெரிக்க நாடுகளும், 12 முறை ஐரோப்பிய நாடுகளும் வென்றுள்ளன. பிரேஸில் 5 முறையும், இத்தாலியும், பிரான்ஸும் தலா 4 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளன.


நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை விளையாடப்படும் உலகக் கோப்பை போட்டிகள் 2022இல் கத்தரில் விளையாடப்பட்ட போது, தென் அமெரிக்க நாடான அர்சென்டினா மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.

கால்பந்தின் மிக புகழ் பெற்ற வீரராக பிரேஸிலின், பிலே கருதப்படுகிறார்.

அண்மையில் நடந்த கத்தர் உலகக் கோப்பை போட்டிகளை சுமார் 500 கோடி மக்கள் கண்டு ரசித்துள்ளதாகவும் , 2022 டிசம்பர் 18இல், அர்சென்டினாவுக்கும், பிரான்ஸுக்கும் நடந்த இறுதிப் போட்டியை சுமார் 150 கோடி மக்கள் கண்டுள்ளதாகவும் FIFA வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


உலகக் கோப்பை போட்டிகளுடன் , புகழ் பெற்ற பல கால்பந்து டோனமென்டுகளும் (ஐரோப்பா சாம்பியன்ஷிப், UEFA, AFC), லீக் போட்டிகளும் (பிரிமியர் லீக், புன்டெஸ்லிகா) நடை பெற்று வருவது கால்பந்தின் செல்வாக்கை காட்டுகின்றது.


கால் பந்தில் இந்தியாவின் நிலமை எடுத்துக் கூறும் படியாக இல்லையென்றாலும், 1964இல், AFC, ஏசியன் கப் போட்டிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளோம். மேலும், தற்சமயம், கால் பந்து விளையாட்டு இந்திய இளைஞர்களுக்கிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதை காண முடிகிறது. இந்தியன் சூப்பர் லீக் என்ற லீக் போட்டிகள் கால் பந்தை ஊக்குவிப்பதற்கு உதவும் என கருதப்படுகிறது.


  • கிரிக்கட் :

பிற உலக நாடுகள், இந்தியாவில் ஒரே ஒரு விளையாட்டு மட்டுமே விளையாடப்படுகிறது என்று கூறும் அளவிற்கு கிரிக்கட் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியர்கள் அனைவரையும், குறிப்பாக எல்லா இளைஞர்களையும் இந்த விளையாட்டு ஈர்த்துள்ளது.


16ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில், இங்கிலாந்தில் தொடங்கிய இந்த விளையாட்டு, 19ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்க காலங்களில், ஆஙகிலேயர், இந்திய குறுநில மன்னர்கள் மற்றும் பிரபுக்களால் விளையாடப்பட்டு வந்த இந்த விளையாட்டு, படிப்படியாக வளர்ந்து இப்போது எல்லோராலும் விளையாடப்படும் விளையாட்டாக மாறியிருக்கிறது. கிராமத்து தெருக்களிலும், திறந்த வெளி மைதானங்களிலும், நன்றாக கட்டமைக்கப்பட்ட விளையாட்டு அரங்களிலும் இந்த விளையாட்டு சென்றடைந்திருக்கிறது.


இவ்விளையாட்டு, பல்வேறு நிலைகளில் பரிணமித்துள்ளது. தொடக்க காலங்களில், ஐந்து நாட்கள் விளையாடிய இந்த விளையாட்டை, டெஸ்ட் கிரிக்கட் என்றழைத்தனர். பின்னர், அது ஒரு நாள் விளையாட்டாக மாறி, இப்போது 20 ஓவர் கிரிக்கட்டாக மலர்ந்துள்ளது. ஆனாலும், இந்த மூன்று வகை விளையாட்டுகளும், இப்போதும் விளையாடப்படுகிறது.


கிரிக்கட், இங்கிலாந்தில் தொடங்கியதாக இருந்தாலும், முதலாவது சர்வதேச கிரிக்கட் போட்டி, 1844இல், அமெரிக்காவிற்க்கும், கனடாவிற்க்கும் இடையே, நியுயார்க்கில் நடைபெற்றது. (icc-cricket.com). இந்தியா தனது முதல் போட்டியை, இங்கிலாந்திற்கு எதிராக 1932இல், கிரிக்கட்டின் மெக்கா எனறழைக்கப்படும் லாட்ஸ் மைதானத்தில் விளையாடியது.


1971இல் தொடங்கிய ஒரு நாள் போட்டிகளில், இந்தியா, இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1983இல், மேற்க்கிந்திய தீவுகளையும், 2011இல் இலங்கயையும் வெற்றி கொண்டு கோப்பையை கைப்பற்றி உள்ளது.

இளைஞர்களை கிரிக்கட்டின் வசம் மேலும் ஈர்ப்பதற்க்கு வேண்டி, டி20 விளையாட்டை தொடங்குவதற்க்கான எண்ணம் 2001இலே உருவானாலும், அது 2005இல் தான் நிறைவேறியது. முதல் சர்வதேச டி20 போட்டி 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும், நியுசிலாந்துக்கும் இடையே ஆக்லேண்டில் (நியுசிலாந்து) நடைபெற்றது. ஜோகனாஸ்பர்க்கில் (தென் ஆப்பிரிக்கா), 2007இல் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது.

கிரிக்கட்டின் மிகச் சிறப்பு ஆட்டக்காரரான சச்சினுக்கு, 2014ஆம் ஆண்டு, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இப்போது உலகிலேயே மிக பண பலம் பெற்ற வாரியமாக உருவெடுத்துள்ளது. அது, இந்திய பிரீமியர் லீக் என்ற டி20 லீக் விளையாட்டு போட்டிகளை 2008ஆம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இது, உலகில், மிகப் பெரிய விளையாட்டு போட்டிகளில், அமெரிக்காவின் தேசிய கால்பந்து(ரக்பி) லீக்க்கு (NFL) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


நவீன கிரிக்கட் உலகில், இந்தியாவில் பல நல்ல கிரிக்கட் வீரர்கள் இருந்தாலும், கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் மற்றும் தோனி முதன்மையாளர்களாக அறியப்படுகிறார்கள். தமிழ் நாட்டைப் பொருத்தவரை வெங்கட் ராகவன், ஸ்ரீகாந்த் மற்றும் அஸ்வினைக் கூறலாம்.

2016இல் தொடங்கப்பட்ட தமிழ் நாடு பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகள், கிரிக்கட்டை, சென்னை அல்லாத பிற நகரங்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளது.


  • டென்னிஸ்:

டென்னிஸ் விளையாட்டு, இடைககாலத்திலேயே ( 1400 வாக்கில்) பிரான்ஸில் விளையாடப்பட்டதாக குறிப்புகள் இருந்தாலும், நவீன டென்னிஸ் விளையாட்டு, இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகரில் 19ஆம் நூற்றாண்டு இறுதியில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து இராணுவ அதிகாரிகள், டென்னிஸ்ஸை, 1880களில் இந்தியாவில் விளையாடத் தொடங்கினர்.


உலகில் மிக முக்கியத்துவமிக்க நான்கு டென்னிஸ் போட்டிகளை கிராண்ட் சிலாம் போட்டிகள் எனறழைக்கின்றனர். அவை ஆஸ்திரேலிய ஓப்பன் (மெல்பெர்ன், கடின ஆடுகளம்), பிரெஞ்ச் ஓப்பன் (பாரீஸ், களிமண் ஆடுகளம்), விம்பிள்டன்( இங்கிலாந்து, புல்வெளி), மற்றும் யு எஸ் ஓப்பன்களாகும்( நியூயார்க், கடின ஆடுகளம்).


இந்த போட்டிகளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டின் வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களில், ஸ்பெயினின் ரபேல் நடால். கோரேஸியாவின் ஜோக்கவிச், அமெரிக்காவின் ஜிம்மி கார்னேர்ஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ், ஜெர்மனியின் ஸ்ரெஃபி கிராஃப் மறறும் செக் குடியரசின் மார்ட்டினா ஆகியோர் முதன்மையாளர்களாக கருதப்படுகின்றனர்.


டென்னிஸில், இந்தியாவின் பங்கு குறிப்பிடும் படியாக உள்ளது. நமது வீரர்கள், தமிழ் நாட்டைச் சேர்ந்த ராமநாதன் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் ஆனந்த் அமிர்தராஜ் அவர்கள், தங்களது காலங்களில் , ஒற்றையர் ஆட்டத்தில், கிராண்ட் சிலாம் போட்டிகளில் அரை இறுதி வரை சென்றுள்ளனர்.


1961, விம்பிள்டன் அரை இறுதி ஆட்டத்தில் ராமநாதன் கிருஷ்ணன்.


அதே போல், மகேஷ் பூபதி, லியான்டர் பேஸ், சானியா மிர்ஸா மற்றும் ரோகன் போப்பன்னா, இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில், பல கிராண்ட் சிலாம் போட்டிகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பூபதி - சானியா மிர்ஸா , 2012 , பிரெஞ்ச் ஓப்பன், கலப்பு இரட்டையர் கோப்பை.


இந்திய பிரிமியர் லீக் போலவே, டென்னிஸ் பிரிமியர் லீக், கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.


  • சதுரங்கம் :

சதுரங்கம் அல்லது செஸ் என்ற யுத்தி (strategy) விளையாட்டு, ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து, அரேபியா, பாரசீக நாடுகளின் வழியாக ஐரோப்பா கண்டத்தையும், அதன் பின் உலகம் முழுவதும் சென்றடைந்தது.


பல விதமாக, பல ஆண்டுகளாக, பல நாடுகளில் சதுரங்கம் விளையாடப்பட்டிருந்தாலும், ஒருங்கமைக்கப்பட்ட சதுரங்கம், 19ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கியது. சர்வதேச செஸ் கூட்டமைப்பு ( FIDE -International Chess Federation), 1924இல் பாரிஸில் உருவாக்கப்பட்டது. அதன் குறிக்கோள் 'நாங்கள் ஒரே குடும்பம்' என்பதாகும். FIDE, எல்லா தேசிய செஸ் கூட்டமைப்புகளை இணைப்பதோடு, அதன் ஆட்சிக் குழுவாகவும் திகழ்கிறது. FIDEஇன் மேற்ப்பார்வையில் உலக செஸ் சேம்பியன்ஷிப்பும், செஸ் ஒலிம்பியாடும் நடத்தப்படுகிறது.


செஸ்ஸில் தமிழகத்தின் பங்கு அளப்பதற்க்கரியது. தமிழகத்தின் மேனுவல் ஆரோன், 1961இல்,இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் ஆனார்.

அதன் பின்,1988இல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆன, தமிழகத்தின், விஸ்வநாதன் ஆனந்த், 2000-2002 வரையும், 2007 முதல் 2013 வரை உலக சேம்பியன்யாக இருந்தார். உலக அரங்கில் விஸ்வநாதனின் வெற்றி இந்தியாவிலும் மற்றும் தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களை செஸ் விளையாட்டின் பால் ஈர்த்தது. அதன் விளைவாக இந்தியாவில் 81 கிராண்ட் மாஸ்டர்களும், தமிழகத்தில் 27 கிராண்ட் மாஸ்டர்களும், இப்போது உள்ளனர். தமிழகத்தில் 8 பெண்கள், கிராண்ட் மாஸ்டர்களாக இப்போது உள்ளனர்.

தமிழகம் ,2013இல் உலக செஸ் சேம்பியன்ஷிப்புக்கான போட்டிகளையும், (ஆனந்த் vs கார்ல்சன்), 2022இல், 44ஆவது செஸ் ஒலிம்பியாடு போட்டிகளை சென்னை/மகாபலிபுரத்தில் செவ்வனெ நடத்தி உலகத்தின் பாராட்டைப் பெற்றது,,நமது, உலகத்தரத்திலான போட்டிகளை நடத்தும் நிர்வாகத் திறனுக்கான அங்கீகரமாகும்.

44ஆவது செஸ் ஒலிம்பியாடு போட்டிகள் - மகாபலிபுரம்.


உலக அரங்கில் விஸ்வநாதன் ஆனந்த், நாரவேயின் கார்ல்சன், ரஷியாவின் கேரி காஸ்பரோவ், அமெரிக்காவின் பாபி பிஸ்ஸர், சோவியத் யூனியனின் ஆன்டோலி கார்ப்போவ் ஆகியோர் சிறந்த செஸ் வீரர்களாக கருதப்படுகிறார்கள். பெண்களில், ஹங்கேரியின் ஜூடிட் போல்கர், இந்தியாவின் விஜயலெட்சுமி(முதல் இந்திய கிராண்ட் மாஸ்டர்) மற்றும் ஹோனெறு ஹம்பியைக் கூறலாம்.


  • இறகு பந்தாட்டம்:

இறகு பந்தாட்டம், பல விதமாக, இந்தியா உட்பட பல நாடுகளில், பல காலங்களில் விளையாடி வந்த போதிலும், 19ஆம் நூற்றாண்டில் தான், அதற்கான ஒருமித்த ஒழுங்கு முறைகளும், விதிகளும், இங்கிலேய இராணுவ அதிகாரிகளால், புனேயில் உருவாக்கப்பட்டன.


இந்த விளையாட்டில், இந்தியர்கள், உலக அரங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பிரகாஷ் பதுகோனேவும், கோபி சந்தும் முறையே 1980 மற்றும் 2001இல், அகில இங்கிலாந்து ஓபன் போட்டியை வென்றுள்ளனர். இந்த வெற்றிகளுக்குப் பின், இந்தியாவில் இறகு பந்தாட்டம் வேகமாக வளர்ச்சி கண்டது.

இது வரை நடந்த இறகு பந்தாட்டம் உலக சேம்பியன்ஷிப் போட்டிகளில், சிந்து, தங்கம், வெள்ளி , வெங்கலம் என ஐந்து பதக்கங்களை வென்றுள்ளார். இதே போல், சாய்னா ஙெங்வாலும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றிருக்கிறார். ஆண்கள் பிரிவில், பதுகோன், சாய் பிரனீத், ஸ்ரீகாந் ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளார்கள். சாய்னாவும், சிந்துவும், ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளனர். பதுகோன், சாய்னா மற்றும் ஸ்ரீகாந் ஆகிய மூன்று வீரர்களும் உலகத் தர வரிசையில் ஒன்றாம் இடத்தை சில காலம் வகித்துள்ளனர்.

2019 உலக சேம்பியன்ஷிப் - சிந்து

பதுகோன், பெங்களூரிலும், கோபி சந்த், ஹைதராபாத்திலும் இரண்டு உலகத் தரம் வாய்ந்த இறகு பந்து விளையாட்டு அகாடமிகளைத் தொடங்கி பல இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை உலக அரங்கில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

பதுகோன் அகாடமி

  • மோட்டார் பந்தயம்:

இந்திய மோட்டார் பந்தய விளையாட்டில் தமிழகத்தின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவின் மோட்டார் பந்தய விளையாட்டு இன்னும் தோன்று நிலையிலேயே ( nascent stage) உள்ளது என்று கூறலாம்.


இந்திய அளவில் சென்னை மோட்டார் பந்தயத்தின் முக்கிய மையமாக திகழ்கிறது. இங்கு அமைந்துள்ள மெட்ராஸ் மோட்டார் பந்தயத் தளம் ( Madras motor race track) பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான தளமாக உள்ளது. இது தவிர, தமிழகத்தில், கோவையில் கரி மோட்டார் வேக வழித் தளமும் (motor speedway track), சேலத்தில் மலை ஏறுதல் தளமும் உள்ளது.

கோவையின் கரிவர்தன், இந்திய மோட்டார் பந்தய விளையாட்டின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் கோவையில் கரி மோட்டார் வேக வழித் தளத்தை தொடங்கி, பின்னாளில், மோட்டார் பந்தயத்தில் சிறந்து விளங்கிய நரேன் கார்த்திகேயன், கருன் சந்தோக் மற்றும் அர்மான் இப்ராகிற்கு பயிற்சி அளித்துள்ளார்.

நரேன் கார்த்திகேயன் இந்தியாவின் முதல் பார்முலா ஒன் டிரைவர் ஆவார்.

இது தவிர, நொய்டா, இந்தியாவில், 2011 முதல் 2013 வரை பார்முலா ஒன் போட்டிகள் நடத்தப்பட்டன.


மேலே விவாதிக்கப்பட்ட விளையாட்டுகள் தவிர கூடைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், அறைப்பந்தாட்டம் (squash), மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுகள் இந்தியாவில் விளையாடப்பட்டாலும், அவைகளில் இந்தியா அதிக முன்னேற்றம் காணவில்லை.


8. விளையாட்டின் தற்போதய நிலை

பொருளாதார ரீதியாக உலகில் 5ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா , ஏன், இன்னும் ஒலிம்பிக் போட்டியையோ, அல்லது உலக கால் பந்து போட்டியையோ நடத்தவில்லை அல்லது நடத்துவதற்க்கான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற கேள்வி விளையாட்டில் ஆர்வம் உள்ள எல்லோர் மனதிலும் உள்ளது.


ஒட்டு மொத்த இந்திய இளைஞர்களை ஒரே ஒரு விளையாட்டு , கிரிகெட், ஈர்த்திருப்பது எதனால்?. இதற்கான விடைகளை பெறுவதற்கு நாம் சிறிது முயற்சி செய்து பார்ப்போம்.


பொருளாதார ரீதியாக உலகில் 5ஆவது இடத்தில் இருந்தாலும், தனி நபர் வருமானத்தில், இந்தியா, இப்போதும் 139ஆவது இடத்திலேயே உள்ளது. நாம் இப்போதும் வளர்ந்து வரும் நாடாகவே கருதப்படுகிறோம். நடந்து முடிந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான செலவு சுமார் $ 13.1 பில்லியன்களாகவும், 2021 டோக்கியோ ஒலிம்பிக்யின் செலவு சுமார் $ 15.4 பில்லியன்களாகவும் உள்ளது. இது, இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 1- 1.25 இலடசம் கோடிகளாகும். வரும் காலங்களில், இது மேலும் கூடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இது போலவே, உலக கால் பந்து போட்டிகளை நடத்துவதற்கு ஆகும் செலவும் அதிகம் தான்.


இப் போட்டிகளை நடத்துவதற்கு உலகத்தரம் வாய்ந்த உள் கட்டமைப்பு, விளையாட்டு உள் கட்டமைப்பு (ஸ்டேடியம், ஓடுகளம் ), நவீன போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதிகள் தேவை. இது மட்டுமல்லாமல், போட்டிகள் முடிந்த பின் , உருவாக்கிய கட்டமைப்புகளின் செயல்பாட்டு செலவுகள், பராமரிப்பு செலவுகள் ஆகியன மொத்த செலவுகளின் மதிப்பை கூட்டி விடும்.


இந்தியா, 2036 ஒலிம்பிக் போட்டிகளை, அகமதாபாத்தில் நடத்துவதற்க்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், உலகக் கால்பந்து போட்டிகளை நடத்துவதற்க்கான ஏற்பாடுகள் எதுவும் தெரியவில்லை.


இந்தியாவில் மற்ற நாடுகளைப் போலவே, ஒவ்வொரு விளையாட்டையும் மேம்படுத்த ஒரு இணையம்/சபைகள் உள்ளன ( இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய ஹாக்கி கூட்டமைப்பு, இந்திய கைப்பந்து கூட்டமைப்பு போன்றவை).

இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அமைப்புகள் உள்ளன. இதை வைத்து பார்த்தால் இந்தியாவில் விளையாட்டு நிர்வாகம் நல்ல முறையில் தானே உள்ளது, பின், ஏன், இந்தியா, உலக அளவில் முன்னேறவில்லை என்ற கேள்வி எழலாம். நிர்வாக கட்டமைப்புகள் இருந்தாலும் அவைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதே கேள்வி.


அரசியல் ஈடுபாடு/ தலையீடு, சிலருக்கு தனிச் சலுகை, ஊழல், போதிய விளையாட்டு கட்டமைப்புகள் இல்லாமை போன்றவைகளே இந்தியாவின் இப்போதைய நிலமைக்கு காரணமாகக் கூறலாம். இப்போது, நீங்கள், தினம் தினம் செய்திச் தாளிலும் மற்ற ஊடகங்களிலும் படிக்கும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் பிரச்சனைகள் மற்றும் 2010 காமன் வெல்த் போட்டிகளை நடத்துவதற்க்கான ஊழல் ஆகியவற்றை எடுத்துக் காட்டாக கூறலாம்.


தமிழகம், தலை சிறந்த விளையாட்டு ஆட்சியாளர்களான சிவந்தி ஆதித்தன், எம்.எ.எம் இராமசாமி, எ.சி முத்தையா, ஸ்ரீனிவாசன் மற்றும் முருகன் போன்றவர்களை இந்தியாவிற்கு அடையாளப் படுத்தியுள்ளது. இதில், சிவந்தி ஆதித்தன், 1987 முதல் 1996 வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை பதவியை வகித்துள்ளார்.

விளையாட்டுத் துறையை, கிரிக்கெட்டின் பிடியிலிருந்து விடுவித்து, போதுமான நிதியை, நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்து (2023 பட்ஜெட்டில், விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு, மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.1 % க்கும் குறைவு) , விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்தி, நல்லதொரு விளையாட்டு நிர்வாகத்தை அரசியல் தலையீடின்றி உருவாக்கினால் இந்தியா உலக அரங்கில் சாதனைகள் புரியும் என்பதில் ஐயம் இல்லை. இந்த எண்ணம் நிறைவேற எல்லா விளையாட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும், அரசும் ஒத்துழைக்க வேண்டும்.


இதுவரை, பல பல விளையாட்டுகளையும், விளையாட்டுகளின் கட்டமைப்புகளைப் பற்றியும் வாசித்து தெரிந்திருப்பீர்கள், உங்கள் வாசிப்பை மேலும் ருசிகரமாக்க, உலகிலுள்ள, சில விசித்திர விளையாட்டுகளை, கீழே அறிமுகப் படுத்துகிறேன்.


9. விசித்திர விளையாட்டுகள் :


கெட்டிஸ் என்ற விசித்திர விளையாட்டு, மேசைப் பந்தாட்ட ( table tennis) மேசையில் தலை கொண்டு மட்டுமே பந்தை அடித்து விளையாடும் விளையாட்டு. வேண்டுமென்றால் மேசையின் மேல் அமர்ந்தும் பந்தை தட்டலாம். பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கும் இந்த விளையாட்டிற்கு உலக சேம்பியன்ஷிப் போட்டிகளும் உண்டு.


துணைவியரை சுமக்கும் போட்டி :

பின்லாந்துவில் தொடங்கி, ஒவ்வொரு வருடமும் உலக சேம்பியன்ஷிப் போட்டிகளும் நடை பெறுகின்றன. சுமார் 250 மீட்டர் நீள ஓட்டமும், 3அடி ஆழ தண்ணீரையும் கடந்து செல்ல வேண்டும். சில காலங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் இது போல ஒரு போட்டி நடத்தப்பட்டது.



க்ரீஸ் கம்பம் போட்டி:

க்ரீஸ் அல்லது எண்ணெய் தடவப்பட்ட கம்பத்தின் மேல் ஏறுவது. உலகில் பல இடங்களில் பல விதமான கம்பங்களில் போட்டி நடத்தப்படுகிறது. நான், இதை, பென்சில்வேனியா நகரத்தில், இத்தாலிய மக்கள் வாழும் பகுதியில் காண நேர்ந்தது. இந்தியாவிலும் பல இடங்களில் இந்த போட்டியை காணலாம்.


பாலாடைக் கட்டிகள் உருட்டல்:

3-4 கிலோ எடையுள்ள மிகப் பெரிய பாலாடைக் கட்டிகளை சரிவில் உருட்டி விட்டு அதன் பின்னால் ஓடி பந்தய இலக்கை அடைவது. இது, இங்கிலாந்தில் உள்ள குளௌசெஸ்டர் என்ற இடத்தில் எல்லா வருடமும் நடை பெறுகிறது.


10. தமிழில் விளையாட்டு புத்தகங்கள்:

தங்களுக்கு விருப்பமான விளையாட்டின் முறை, விதிகள், விளையாட்டு மைதானத்தின் அளவுகள் மற்றும் அமைப்புகள், விளையாடுவதற்கு வேண்டிய பயிற்சிகளைப் பற்றி அறிய முனைவர், நவராஜ் செல்லையா அவர்கள் தழிலில் எழுதிய புத்தகங்கள் உதவியாக இருக்கும். அவர்களது புத்தகங்கள் கீழ்க் காணும் பதிப்பகத்தில் அச்சிடப்படிகின்றன.


இராஐமோகன் பதிப்பகம், 8/2 போலீஸ் குடியிருப்பு, கண்ணம்மா பேட்டை, தி.நகர் 600017.


( இந்த பதிப்பகத்தின் பெயரும், என்னுடைய பெயரும் ஒன்றாக இருந்தாலும், இப்பதிப்பகம் என்னுடையது அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்).


சமர்ப்பணம் :

எனது தந்தையார், அவர்களது பள்ளி/ கல்லூரி காலங்களில், கால்பந்து மற்றும் பூப்பந்து (ball badminton) வீரராகவும், குவாட்டர் மையில் ஓட்டப் பந்தயத்தில் முதல்வனாகவும் திகழ்ந்தார். அவர்களது நான்காவது நினைவாண்டு சில தினங்களில் வர இருப்பதால், இந்த , விளையாட்டு சார்ந்த வலைப் பதிவை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.






98 views4 comments

4 Comments


Mohan K
Mohan K
May 17, 2023

அருமை. மிக சிறந்த ஆய்வு, தொகுப்பு. அவசியம் புத்தகமாக போட வேண்டும்

Like
rajamohansub
May 17, 2023
Replying to

நன்றி மோகன்.

Like

Mathivanan Jothi
Mathivanan Jothi
May 13, 2023

Well researched and informative.

Could have mentioned about terror attacks during 1971 Munich olympics and also about Kabaddi

Like
rajamohansub
May 13, 2023
Replying to

Thanks, Mathi. I will include about Kabbadi in the next revision

Like
bottom of page