பழந் தமிழ்க் கலைகளின் மறுமலர்ச்சி (Renaissance of old Tamil arts)
- rajamohansub
- May 17
- 5 min read
ஒரு இனத்தின் முதிர்ச்சியை, அந்த இன மொழியின் தொன்மை, அது உலகத்திற்க்கு அளித்த கலை, தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் அதன் உயரிய கலாச்சாரமும், பண்பாடுகளும், உலக கலாச்சாரங்களில் ஏற்ப்படுத்திய தாக்கம் என்பனவற்றால் தீர்மானிக்கலாம்.
பழம்பெரும் மொழியான தமிழ், தொடர்ந்து இன்றளவும் பேசப்பட்டு வருகின்ற தொன்மையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதைத் தான், ஐயநாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி' எனக் கூறுகிறது. இந்த வெண்பாவிற்கு பல விளக்கங்கள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் தமிழின் தொன்மையையே குறிக்கிறது.
பண்டைக் காலத்திலிருந்தே தமிழகத்தில் பல அரிய கலைகள் வளர்ந்து, உலகலாவிய பெருமைகளை பெற்றுள்ளன. சங்க கால நாட்டியக் கலையான, ஆடற் கலை மற்றும் பிற்கால 'சதிர்' வழி வந்த பரதமும், கல்லில் குடைந்தெடுத்த/ உருவாக்கிய நுண்கலை கோவில்களும்/சிற்பங்களும் (தஞ்சை பெரிய கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள், சமண குடைவரை கோவில்கள்), சித்த மருத்துவமும், தொழில் நுட்ப உயரிய நீர் பாசன அமைப்புகளும் (கல்லணை) தமிழர்கள் உலகுக்கு அளித்த கொடைகளாகும்.
UNESCO, தமிழகத்தில் நான்கு படைப்புகளை உலக பாரம்பரியம் கொண்டதாக அறிவித்துள்ளது, அப்படைப்புகளின் தரத்திற்கு சான்றாகும்.




இப்போது உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் மற்றும் கலாசாரங்கள் தோன்றுவதற்கு முன்னரே, சங்க காலத் தமிழர்கள், உலக நாகரீகத்திற்கு மனித நேயம், சமத்துவம், மனித ஒற்றுமை கோட்பாடுகளை அளித்துள்ளார்கள். சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் தனது புற நானூற்று பாடலில் ( 192) இவ்வாறு கூறுகிறார்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
பழங்காலக் கலைகள்:
ஆடற்கலை:
ஆடற்கலை, கூத்துக்கலை என்று சங்ககாலத்திற்கு முன்பு அறியப்பட்டுள்ளது. ஆடற்கலைகளைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய நூல்களான பெருநாரை மற்றும் பெருங்குருகு போன்றவை பெரும்பாலும் அழிந்து விட்டாலும், எஞ்சிய பழந்தமிழ் நூல்களான சயந்தம், செயிற்றியத்திலிருந்து சில குறிப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அக்குறிப்புகளிலிருந்து, மறைந்த பழைமையான ஆடல்களில் கீழ் வரும் 11 வகை ஆடல்கள் பெயர் பெற்றவைகளாக அறியப்படுகின்றன. அல்லியக்கூத்து,கொடுகொட்டியாடல், குடையாடல், குடக்கூத்து, பாண்டுரங்கம், மல்லாடல், துடிக்கூத்து, கடையக்கூத்து, பேடாடல், மரக்காலாடல், பாவைக்கூத்து. இது தவிர குரவைக் கூத்துகளும், வெறியாட்டும் ஆடப்பட்டுள்ளன.
சங்க காலத்தில் ஆடற் கலைகளை துணைக்கியர், விறலியர்கள், பாணர் மற்றும் கூத்தர்களின் பாடல் மற்றும் இசையுடன் இணைந்து நிகழ்த்தியுள்ளனர். இந்த11 வகை ஆடல்களையும், மாதவி ஆடியள்ளதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
சிலப்பதிகார காலத்தில் பெருமையுற்றிருந்த ஆடல், நாடகக் கலைகள் சமண, புத்த மத காலங்களில் ஆதரவு குன்றி நலிவுற்று அக் கலைகள் ஒரு சில குடும்பங்களுக்குள் முடங்கிப் போனது.
காலகட்டத்தில் முன்பு காணப்பட்டதும், சிலப்பதிகார வரிகூத்துகளின் அடிப்படையில் பரிணமித்து வந்ததான ஆட்ட முறையே இப்போது நாம் காணும் பரத நாட்டியக் கலை.
பதினெட்டாம் நூற்றாண்டில், பரதக் கலையின் இரு பெரும் பாணிகளான பந்தனைநல்லூர் பாணியும், வழுவூர் பாணியும் தோன்றின. பழம் பெரும் நட்டுவனார்களான பொன்னையா, சின்னையா, மற்றும் சிவானந்தன் வழியில் பந்தனைநல்லூர் பாணியும், வழுவூர் பாணி வீரப்ப நட்டுவனார் வழியிலும் உருவானதாக அறியப்படுகிறது

பரதத்தில் சிறந்து விளங்கிய பால சரஸ்வதி அம்மையாரைப் பற்றி சத்தியஜித்ரே 1976இல் உருவாக்கிய 'பாலா' என்ற ஆவணப்படமும்,
சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் காலத்தில் (12ஆம் நூற்றாண்டு) வழக்கிலிருந்த ஆடல் இலக்கண நூலாகிய பஞ்ச மரபின் விளக்க உரையும், ( தமிழ் இணைய வழிப் பல்கலைக்கழகம் வெளியிட்டது),
சதுராட்டத்தின் கடைசி தலைமுறையாக அறியப்படும் பத்மஸ்ரீ திருமதி முத்துக்கண்ணம்மாவின் வாழ்க்கையும், கலையும், (இந்திய திரைப்பட பிரிவு உருவாக்கம்),
சதிராட்டத்திலிருந்து பரதநாட்டியம் உருவாகிய வரலாறு, (இந்திய கலாச்சார அமைச்சகம் வெளியீடு), மற்றும்
தமிழிசையின் தோற்றம் மற்றும் வடிவம் குறித்து ஆப்பிரகாம் பண்டிதர் 1917 இல் எழுதிய கருணாமிர்தசாகரம் என்ற நூலின் இணைப்புத் தொடுப்புகள் (links) கீழே தரப்பட்டுள்ளன.
https://www.youtube.com/watch?v=ak_a1RJ2DZc - Documentary by Satyajit Ray
https://www.youtube.com/watch?v=5pez6WzhSXQ - Devaraddiar in Sadir - The life and art of Muthukannammal.
https://nvli.in/stories/sadir-attam-bharatanatyam - From Sadirrattam to Bharathanatyam
https://www.karunamirthasagaram.org/ - a treatise on Tamil music by Arraham Panditar
பாடற்கலை - காவடிச் சிந்து
இசைத் தமிழின் ஒரு வடிவமான காவடிச் சிந்து, தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானை தவமிருந்து, காவடி சுமந்த படி, பக்தர்கள் பக்தியுடன் ஆடிப்பாடும் ஒரு நிலையாகும். காவடி பற்றிய குறிப்புகள் சங்க கால நூல்களான பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் காணப்பட்டாலும், காவடிச் சிந்து இசை வடிவமாக பின்னர் தோன்றியதாக அறிப்படுகிறது.
தென்காசி மாவட்டம், சங்கர நயினார் கோவிலை அடுத்த சென்னி குளத்தில் 1865ஆம் ஆண்டு பிறந்த அண்ணாமலை ரெட்டியார், காவடிச் சிந்து என்ற நூலை இயற்றியுள்ளார். அந்த நூலிற்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
காவடிச் சிந்து பாடல்கள் அண்ணாமலை ரெட்டியார். பாரதியார் மற்றும் பெரியசாமி தூரன் போன்றவர்களால் இயற்றப்பட்டு, இப்பொழுது, கர்நாடக இசையரங்குகளிலும், பரத நாட்டிய மேடைகளிலும் பாடப்பட்டும்/ஆடப்பட்டும் வருகிறது.

பெரியசாமி தூரனின் காவடிச் சிந்து பாடல், பரத நாட்டியமாக ஆடப்பட்டதின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. பாரதியாரின் மிகப் புகழ் பெற்ற 'வில்லினை ஒத்த புருவம்' என்ற காவடிச் சிந்து பாடல், கர்நாடக இசையில் பாடப்பட்டதின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=EH0oST6ReKc - பெரியசாமி தூரன்
https://www.youtube.com/watch?v=Ms1gYVxEDmE - பாரதியார்
காவடிச் சிந்து பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தமிழ் திரை உலகிற்கும் பங்குணடு. https://www.youtube.com/watch?v=JXdlqo2aAwU
இவைகளை எல்லாம் வைத்து நோக்குங்கால், பழந் தமிழ் காவடிச் சிந்து வகைப் பாடல்கள் இப்பொழுதும் உயிர்த் துடிப்புடன் உலா வருவதைக் காணலாம்
போர்க் கலை - சிலம்பம்:
'கம்பு சூத்திரம்' என்ற நூலே சிலம்பக் கலையின் முதல் நூலாக சங்க காலம் தொட்டு நம்பப்படுகிறது. போர் மற்றும் தற்காப்பு கலையான சிலம்பம், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் போற்றப்பட்டு, பின்பு ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டதொரு கலையாகும்.
சங்க இலக்கியங்களில் போர் முறைகளைக் குறித்து சொல்லப்படும் பாடல்களில், கம்பு, போர் முறைக்கான ஆயுதமாக பயன்பட்டதாக கூறப்பட்டாலும், சிலம்பம் குறித்து நேரடிக் குறிப்புகள் உள்ளதாக தெரியவில்லை. ஆனால். வீரமா முனிவரின், தேம்பாவணியில் சிலம்பம் குறித்து கீழ் வருமாறு கூறப்படுகிறது
'கருதிநூ லுயிர் பெற்றன்ன ஆடர்த்தவதத்துறையின் மிக்கோய்
கருதிநூ லுரைப்ப கேட்டுக் களிப்புறின் சிலம்ப வீரத்
திருதிநூன் முடவர் கேட்க தென்னவன் களித்த தல்லால்
பொருதிநூ லெழக்கத் தஞ்சப் பொழுதி லாற்றா தென்றான்'
சிலம்பம்,18 வேறுபட்ட பாணிகளை உள்ளடக்கியது. அவையாவன:
நிலை கலக்கி ( மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அதிகம் நடைமுறையில் உள்ளது), குத்து குரவை, மின்னல் வெட்டு, மின்னல் வீரன், நாகம் - 16, நாக பாஷனம், கள்ளப் பத்து, கிடா முட்டு, பனையேறி மல்லன், கல்யாண வரிசை, குரவஞ்சி, கொம்பேறி மூக்கன், துலுக்கானம், மரக்கானம், தொம்மன் குத்து, பார்வை விளையாட்டு, கலகம், மற்றும் கர்நாடகன்


ஆங்கிலேயர் காலத்தில், சிலம்பக் கலை சிறிது தொவ்வுற்றிருந்தாலும், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, சிலம்ப ஆசான்களின் முயற்சியாலும், மக்களின் உணர்வு பூர்வ ஈடுபாட்டாலும், அரசின் ஊக்குவிப்பாலும் இப்பொழுது ஒரு நல்ல நிலையில் உள்ளது.
சிலம்பக் கலையை உலகமயமாக்கும் முயற்ச்சியில், மலேசியத் தமிழரான முருகன் சில்லையா உலக சிலம்பம் சங்கத்தை (World Silambam Association) மலேசியாவில் உருவாக்கி அதற்கு மலேசிய அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். இந்த அமைப்பில், இப்பொழுது, ' அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பு'ம்( All India Silambam Federation), மற்றும் பல உலக நாடுகளின் சிலம்பம் கூட்டமைப்புகளும் அங்கங்களாக உள்ளன. இந்த கூட்டமைப்புகள் வருடந்தோறும் அகில உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தி வருகின்றன. https://silambam.world/ - World Silambam association
தமிழ் நாட்டில், சிலம்பம், உடற்கல்வி இணைப் பாடதிட்டமாக அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், 2008ஆம் ஆண்டு முதல் மாநில அளவிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மேலும், சிலம்ப விளையாட்டை ஊக்குவிற்பதற்கு, தமிழக அரசு, 2021ஆம் ஆண்டு, சர்வதேச மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற சிலம்ப வீரர்கள் அரசு வேலை மற்றும் தொழிற் பயிற்சி கல்லூரிகளில் சேருவதற்கு ஏதுவாக சிலம்ப விளையாட்டை 3% விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
சிலம்ப ஆசான்களின் தன்னலமில்லா முயற்சியால், சிலம்பம், இப்பொழுது தமிழகத்தில் அனேகமாக எல்லா ஊர்களிலும், பெரு நகரங்களிலும் கற்றுத் தரப் படுகிறது. முருகன் சில்லையா, பவர் பாண்டியன் ஆசான் மற்றும் ஐஸ்வர்ய மணிவண்ணன் ஆகியோர் முன்னனி ஆசான்களாக கருதப் படுகின்றனர்.

https://www.facebook.com/intellischoolvizag/videos/silambam-3000-years-old-martial-arts/684632585599739/ Aishwarya Manivannan
பொழுது போக்கு கலை - பல்லாங்குழி
தமிழ் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, கணக்கிடல், திட்டமிடல், நினைவாற்றல் மற்றும் கவனத்தை வளர்க்க உதவும் பொழுது போக்கு விளையாட்டாகும். பல்லாங்குழி எப்போதும், பெண்களால் விரும்பி விளையாடும் விளையாட்டாகவே உள்ளது. அதனால் தானோ என்னவோ, பழங்காலங்களிலும், சிறிது காலத்திற்கு முன்பு வரையும் பல்லாங்குழி, பெண்களின் தாய் வீட்டு சீதனத்தில் இடம் பிடித்திருந்ததை நாம் மறக்க முடியாது. நானும் என் பங்கிற்கு எனது கல்யாண நாளில் என் மனைவியுடன் பல்லாங்குழி விளையாடியிருக்கிறேன். வெற்றியாளரை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
தொல்பொருள் ஆய்வாளர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பன்னம்பறை கிராமத்தில்,10,000 வருடத்திற்கு முன்பான கல் பல்லாங்குழியை கண்டு பிடித்துள்ளனர். இது மரத்திலான பல்லாங்குழிக்கு முந்தையதாகும். அடியார்க்கு நல்லார், தனது சிலப்பதிகார உரையில், 'பெண்கள் வீட்டினுள் அமர்ந்து குழிகளில் கற்கள் அல்லது விதைகள் வைத்து விளையாடும் விளையாட்டு' இருந்ததாக கூறுகின்றார். இதுவே பிற்காலத்தில் 'பல்லாங்குழி' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.valaitamil.com/pallanguzhi-game-rules_14290.html- பல்லாங்குழி - தோற்றம் மற்றும் வளர்ச்சி.
பல்லாங்குழி, உலக அளவில், ஆப்பிரிக்கா கண்டத்தில் பல நாடுகளிலும், இலங்கை மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளிலும், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில், பல தரப்பட்ட பெயர்களால் விளையாடப்படுகிறது. பல்லாங்குழி பலகைகள் பெரும்பாலும் உயரிய மரத்தாலோ அல்லது வெண்கலத்தினாலோ செய்யப்பட்டிருக்கும். இருவர் மட்டுமே ஆடக் கூடிய இந்த விளையாட்டில், சோவி, குன்னி முத்து, புளியங்கொட்டை ஆகியவை காய்களாக உபயோகிக்கப்படுகின்றன.


பல்லாங்குழி விளையாட்டை புரிந்து கொள்ள செய்முறை விளக்க வீடியோ கீழே தரப்பட்டுள்ளது
https://www.youtube.com/watch?v=SeM7nI93ACw - பல்லாங்குழி செயல்முறை விளக்க வீடியோ
இன்றைய காலகட்டத்தில், பொழுது போக்கு மின்னனுசார் விளையாட்டுகள் அதிகம் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதால், அது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்லாங்குழி விளையாட்டை பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தன்னார்வல தொண்டு நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் முனைப்புடன் செயல்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாக உள்ளது. அதன் ஒரு பாகமாக சென்னை மயிலாப்பூரிலும், பாலக்காட்டிலும் பல்லாங்குழி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அப்போட்டிகளில் பொதுமக்களும், இளைஞர்களும் அதிக அளவில் கலந்து கொள்வது பல்லாங்குழி விளையாட்டின் செல்வாக்கு இன்றும் குன்றாமல் நிலை நிற்பதையே காட்டுகிறது.

https://www.youtube.com/watch?v=R8Io5V9NrM4 - பல்லாங்குழி நாட்டுப்புற பாடல்
https://iji-studies.com/index.php/IJIS/article/view/476/482 Research paper on 'the impact of Pallankuzhi game on visual motor skills among children with learning disability
நூற்பட்டியல்
கார்த்திகா கணேசர், தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்
முனைவர் மு.சுப்பையா, கி.மகாலட்சுமி, புதுவை பல்கலைக்கழகம். சங்ககால ஆடற்மகளிர்
கே வி இராமன், பாண்டியர் வரலாறு, பக்கம் 234 -239
Somerset Playne, Southern India , its history, people, commerce and industrial resources, Pages 486 - 491
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு இரண்டாம் பாகம்
மு. ஆபிரகாம் பண்டிதர், கருணாமிர்தசாகரம் - முத்தமிழில் ஒன்றாகிய இசைத்தமிழ் என்னும் சங்கீத நூல்
அண்ணாமலை ரெட்டியார், காவடிச் சிந்து

அருமையான பதிவு!
இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பழைய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சி செய்ய்யும் சிலரை பாராட்டியே ஆக வேண்டும்.
ஆடல், பாடலுடன் நாடகக்கலை பற்றியும் சில குறிப்புகள் சேர்த்திருக்கலாம்.
சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து மருமகள் வந்தபோழுது மதுரை புது மண்டபத்த்தில் பல்லாங்குழி செட் , செப்பு சாமான் செட் வாங்கி சென்றார். புது மண்டபத்தில் பழங்கால தமிழர் உபயோகப்படுத்திய பொருட்கள் இன்றும் கிடைக்கும்!